அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு சொகுசு விடுதியில், போலியான பணப் பரிவர்த்தனை ஆதாரங்களைக் காட்டி சுமார் 6 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி தங்கியிருந்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சோனா பகுதியைச் சேர்ந்த ஹிமான்ஷு என்ற அந்த இளைஞர், எம்.சி.ஏ பட்டதாரி ஆவார்.
மேலும் அவர் கடந்த அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி வரை அந்த விடுதியில் தங்கியிருந்துள்ளார். விடுதி நிர்வாகம் வாடகை குறித்து கேட்டபோதெல்லாம், ஆன்லைன் மூலம் பணம் செலுத்திவிட்டதாகக் கூறி, போலி ‘ஸ்கிரீன்ஷாட்’களை காட்டி ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் விடுதி நிர்வாகம் தங்களது வங்கிக் கணக்கைச் சரிபார்த்தபோது, ஒரு ரூபாய் கூட வரவு வைக்கப்படாதது தெரியவந்தது. ஹிமான்ஷு மொத்தம் 6.17 லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விடுதி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர்.
இதனால் விசாரணையில், யூடியூப் வீடியோக்களைப் பார்த்து ஒரு போலி செயலியைப் பதிவிறக்கம் செய்ததாகவும், அதன் மூலமே போலி பணப் பரிவர்த்தனை ஆதாரங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
