பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் திருமண மேடையிலேயே மணப்பெண் சுடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 வயதான ஆர்த்தி குமாரி என்ற பெண்ணிற்கு திருமணம் நடந்து கொண்டிருந்தபோது, கூட்டத்திற்குள் புகுந்த தீபந்து என்ற இளைஞர் ஆர்த்தியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினார்.
இதில் பலத்த காயமடைந்த அந்த இளம்பெண் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினரின் விசாரணையில், இது ஒருதலைக் காதல் விவகாரம் என்பதும், ஏற்கனவே இந்த நபரால் ஆர்த்தியின் ஒரு திருமணம் நின்று போனதும் தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாக இருந்த தீபந்துவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தால் ஆர்த்தியின் குடும்பத்தினர் நிலைகுலைந்து போயுள்ளனர். தனது மகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அவரது தந்தை மிகுந்த மனவேதனையுடன் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். “என் மகள் ஒருவேளை உயிர் பிழைத்து வந்தாலும், இனி அவளை யார் திருமணம் செய்து கொள்வார்கள்?” என்று அவர் கண்ணீருடன் கவலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மணமகன் வீட்டார் ஏற்கனவே இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், ஒருதலைக் காதலால் ஒரு பெண்ணின் வாழ்வும், கனவுகளும் சிதைக்கப்பட்டுள்ள விதம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
