திருமணம் செய்ய வற்புறுத்திய 8 மாத கர்ப்பிணி காதலிக்கு, பானிபூரியில் விஷம் வைத்துக் கொலை செய்ய முயன்ற காதலனைப் போலீஸார் கைது செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்வா மாவட்டத்தைச் சேர்ந்த சாகேத் கேசரி என்பவரும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், ஊர் பஞ்சாயத்து மூலம் இருவரும் பிரிக்கப்பட்டனர். இருப்பினும், சில மாதங்களுக்குப் பிறகு சாகேத் மீண்டும் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிப் பழகியுள்ளார். இதில் அந்த இளம்பெண் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.
தற்போது அந்தப் பெண் 8 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சாகேத்தை வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாகேத், காதலியைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி (2026), காதலியை வெளியே அழைத்துச் சென்ற சாகேத், அவருக்குப் பிடித்தமான பானிபூரியை வாங்கிக் கொடுத்துள்ளார். அதில் முன்னதாகவே விஷம் கலந்து வைத்திருந்துள்ளார்.
பானிபூரியைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பெண்ணுக்கு ரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது. பதற்றமடைந்த இளம்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சாகேத் அழைத்துச் சென்றுள்ளார்.
காட்டுப் பகுதிக்குச் சென்றதும் சாகேத் தனது சுயரூபத்தைக் காட்டினார். அந்தப் பெண்ணை சரமாரியாகத் தாக்கியதுடன், கழுத்தை நெரித்துக் கொலை செய்யவும் முயன்றுள்ளார். உயிருக்குப் போராடிய அந்த இளம்பெண், அவரிடமிருந்து நூலிழையில் தப்பித்து, அடர்ந்த காட்டுக்குள் ஓடிச் சென்று ஒளிந்து கொண்டார். இரவு முழுவதும் காட்டுக்குள்ளேயே பதுங்கியிருந்த அவர், மறுநாள் காலை தனது வீட்டை அடைந்து நடந்த கொடுமைகளை விவரித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த சாகேத் கேசரியை உடனடியாகக் கைது செய்தனர். “திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியைக் கொல்லத் திட்டமிட்டதைச் சாகேத் ஒப்புக்கொண்டுள்ளார்” எனப் போலீஸார் தெரிவித்தனர். மேலும் 8 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் காதலிக்கு விஷம் வைத்துக் கொல்ல முயன்ற இந்தச் சம்பவம் ஜார்கண்ட் மக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
