உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெய்ரி பகுதியில், மன அழுத்தத்திற்காக மருந்து உட்கொண்டு வந்த பெண்ணின் நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, வீட்டில் வேலை செய்த நபர் நீண்டகாலமாகப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் போலீஸார் அந்த நபரைக் கைது செய்துள்ளனர்.

லக்கிம்பூர் கெய்ரி மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில் ஒப்பனைப் பொருட்கள் (Cosmetic) கடை நடத்தி வரும் நபர் ஒருவர், தனது கடையில் வேலைக்கு இருந்த ஆயுஷ் கார்க் என்பவர் மீது இந்தப் புகாரை அளித்துள்ளார். அந்த நபரின் மனைவி மன அழுத்தப் பாதிப்பிற்காக நீண்டகாலமாக மருத்துவர் அறிவுறுத்திய மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார்.

அந்த மருந்துகள் ஒருவித மயக்கத்தையும், ஆழ்ந்த தூக்கத்தையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இதனைத் தெரிந்து கொண்ட ஆயுஷ் கார்க், அந்தப் பெண் மயக்க நிலையில் இருக்கும் நேரங்களில் வீட்டிற்குச் சென்று கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மயக்க நிலையில் இருந்ததால் அந்தப் பெண்ணால் இதனைத் தடுக்க முடியாமல் போயுள்ளது.

கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி, அந்தப் பெண் அன்று உட்கொள்ள வேண்டிய மன அழுத்த மருந்துகளை எடுக்கவில்லை. இதனை அறியாமல் வழக்கம்போல வீட்டிற்குள் நுழைந்த ஆயுஷ் கார்க், அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது முழு நினைவாற்றலுடன் இருந்த அந்தப் பெண், அந்த நபரைக் கடுமையாக எதிர்த்துப் போராடினார்.

பிடிபட்டவுடன் ஆத்திரமடைந்த ஆயுஷ் கார்க், யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் மாலையில் கணவர் வீடு திரும்பியதும், நடந்த அனைத்துக் கொடுமைகளையும் அழுதுகொண்டே அந்தப் பெண் விவரித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து  ஆயுஷ் கார்க்கை உடனடியாகக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், “பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது,” என்றனர்.