உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், 50 வயது நபர் தனது 14 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில், தனது மனைவிதான் இந்த முடிவுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி இரவு 8:45 மணியளவில், தந்தை மற்றும் மகளின் சடலங்கள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், அவர்கள் விகாஸ் குப்தா (50) மற்றும் அவரது மகள் வேதிகா (14) என்பது உறுதி செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு அருகே நின்றிருந்த விகாஸின் காரைப் போலீஸார் சோதனையிட்டபோது, அங்கிருந்த செல்போனுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தற்கொலைக் கடிதம் சிக்கியது. அதில் தனது மரணத்திற்குத் தனது இரண்டாவது மனைவி டாலிதான் காரணம் என விகாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
முதல் மனைவி இறந்த பிறகு, விகாஸ் டாலி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், கடந்த சில காலமாக தம்பதி இடையே கடும் மோதல் நிலவி வந்துள்ளது. இது குறித்து விகாஸின் சகோதரர் சிவம் உமர் கூறுகையில், “விகாஸின் மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருந்தது. அவர் அந்த நபருடன் துபாய்க்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலாலேயே விகாஸ் தனது மகளுடன் தற்கொலை செய்துகொண்டார்,” எனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விகாஸின் மனைவி டாலி உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். “தற்கொலைக் கடிதம் மற்றும் குடும்பத்தினர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என போலீசார் கூறியுள்ளனர்.
