பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரின் அசுர வேகத்திற்குப் பின்னால் இருக்கும் வலிகள் மற்றும் அவரது விடாமுயற்சி குறித்து இந்திய முன்னாள் வீரர் முனாஃப் படேல் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் சோயப் அக்தர், கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக பந்து வீசியவர் என்ற சாதனையை இன்றும் தன் வசம் வைத்துள்ளார். அவரைப் பற்றி முனாஃப் படேல் ஒரு நேர்காணலில் கூறியதாவது,

“சோயப் அக்தருக்கு நான் தனிப்பட்ட முறையில் ஒரு ‘சல்யூட்’ வைக்கிறேன். ஆசிய நாடுகளின் சீதோஷ்ண நிலையில், ஒரு வேகப்பந்து வீச்சாளர் 150 கி.மீ வேகத்திற்கு மேல் தொடர்ந்து 15 ஆண்டுகள் பந்து வீசுவது என்பது சாதாரண காரியம் அல்ல. அதற்கு அவர் ஒரு ‘பைத்தியமாக’ இருந்தால் மட்டுமே சாத்தியம். அந்தப் பைத்தியக்காரத்தனம் அவரிடம் இருந்தது. அவருக்கு நிகர் அவரே தான்!” என முனாஃப் புகழாரம் சூட்டியுள்ளார்.

சோயப் அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கை சாதனைகளால் நிறைந்திருந்தாலும், அதே அளவு காயங்களாலும் நிரம்பி இருந்தது. முனாஃப் இது குறித்துக் கூறுகையில், “அவரது இரண்டு முழங்கால்களும் முற்றிலும் செயலிழந்து போயிருந்தன. ஆனால், ‘நான் இதைச் செய்தே தீருவேன்’ என்ற வெறி அவரிடம் இருந்தது. ஒரு கட்டத்தில் அவரால் நடக்கவே முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால், ஊசி மூலம் முழங்கால்களில் தேங்கியிருக்கும் திரவத்தை (Fluid) வெளியேற்றிவிட்டு, வலியுடனேயே மைதானத்திற்கு வந்து பந்து வீசுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

2003 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், சோயப் அக்தர் மணிக்கு 161.3 கி.மீ வேகத்தில் பந்து வீசி உலக சாதனை படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் பிரட் லீ மற்றும் ஷான் டைட் (தலா 161.1 கி.மீ) ஆகியோர் உள்ளனர். சிறு வயதில் ‘ஆர்த்ரைடிஸ்’ நோயால் பாதிக்கப்பட்டு, 6 வயது வரை நடக்கவே சிரமப்பட்ட ஒரு சிறுவன், உலகிலேயே அதிவேகப் பந்துவீச்சாளராக உருவெடுத்தது ஒரு மிரட்டலான வரலாறு. தற்போது முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள அக்தரின் அந்த ‘வேகமான’ போராட்டத்தை கிரிக்கெட் உலகம் இன்றும் வியந்து பார்க்கிறது.