ஐ.பி.எல். 2026 தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இதற்கிடையே, விராட் கோலியின் காலில் விழ முயன்ற இளம் வீரரின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்.சி.பி. முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பெங்களூருவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 146 ரன்களுக்கு முடக்கப்பட்டது. 147 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, வெறும் 15.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆர்.சி.பி. அணி புள்ளிப்பட்டியலில் கம்பீரமாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்த போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஃபீல்டிங் செய்ய முடியாத சூழலில் இருந்த விராட் கோலி, ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக நேற்று ‘இம்பாக்ட் பிளேயராக’ களமிறங்கினார். தனது அதிரடியைத் தொடர்ந்த அவர், 34 பந்துகளில் 49 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். நடப்பு சீசனில் 57 சராசரியுடன் 228 ரன்கள் குவித்துள்ள கோலி, ‘ஆரஞ்சு தொப்பியை’ மீண்டும் தனது வசப்படுத்தியுள்ளார்.

 

போட்டிக்குப் பிறகு லக்னோ அணியின் இளம் வீரர் நமன் திவாரி, விராட் கோலியுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கோலியின் கால்களைத் தொட்டு நமன் திவாரி வணங்க முயன்றார். இதைக் கண்டு பதறிப்போன விராட் கோலி, அவரைத் தடுத்து நிறுத்தி தோளோடு அணைத்துக்கொண்டார். கோலியின் இந்த எளிமையான குணமும், அந்தப் புன்னகையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.