புனித நூலான ‘குரு கிரந்த் சாகிப்’ அவமதிப்பு விவகாரத்தில் கடுமையான சட்டம் கோரி, சுமார் 560 நாட்களாக 400 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தி வந்த சீக்கிய ஆர்வலர் குருஜீத் சிங் கல்சா, ஒருவழியாக தனது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து கீழே இறங்கினார்.
கடந்த 2024 அக்டோபர் 12-ஆம் தேதி, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகேயுள்ள சமனா பகுதியில் உள்ள செல்போன் டவர் ஒன்றில் குருஜீத் சிங் ஏறினார். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப்பை அவமதிப்பவர்களுக்கு எதிராக கடுமையான ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதே இவரது முக்கிய கோரிக்கையாக இருந்தது.
வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் சுமார் 18 மாதங்களுக்கு மேலாக டவர் உச்சியிலேயே அவர் தங்கியிருந்தார். அவருக்குத் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றை அவரது ஆதரவாளர்கள் கயிறு மூலம் டவரின் உச்சிக்கு அனுப்பி வைத்து வந்தனர். அவரது இந்த அசாத்தியமான உறுதி ஒட்டுமொத்த பஞ்சாப் மாநிலத்தையும் வியப்பில் ஆழ்த்தியது.
குருஜீத் சிங்கின் கோரிக்கையை ஏற்று, பஞ்சாப் அரசு இதற்கான சிறப்பு சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்தது. குரு கிரந்த் சாகிப்பை அவமதிக்கும் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 25 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் புதிய அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.
அரசின் இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, தனது போராட்டத்தை கைவிட குருஜீத் சிங் சம்மதித்தார். இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் ராட்சத கிரேன் உதவியுடன் அவரை பத்திரமாக கீழே இறக்கினர். 560 நாட்களுக்குப் பிறகு தரை இறங்கிய அவருக்கு ஆதரவாளர்கள் பூக்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கீழே இறங்கிய குருஜீத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த போராட்டத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் பகவந்த் மான் மற்றும் சட்டப்பேரவை சபாநாயகருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். பின்னர், நீண்ட நாட்களாக டவர் மீது இருந்ததால் அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
