ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில், திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு வருங்கால கணவர் தன்னை பிடிக்கவில்லை என்று கூறியதால் மனமுடைந்த முதுகலை பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடப்பா மாவட்டம் சின்ன சௌக் பகுதியைச் சேர்ந்தவர் ரெஹானா (26). எம்.எஸ்.சி முடித்துள்ள இவருக்கும், புரோத்தூரைச் சேர்ந்த ஷாஜகான் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஷாஜகான் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IT) மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்தது.
நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். ஆனால், திருமண தேதி நெருங்க நெருங்க ஷாஜகானின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனக்கு ரெஹானாவைப் பிடிக்கவில்லை என்றும், தன்னிடம் ஏற்கனவே நான்கு காதலிகள் இருப்பதாகவும் கூறி ரெஹானாவை மனவேதனைக்கு உள்ளாக்கியுள்ளார். முதலில் இதை விளையாட்டு என்று நினைத்த ரெஹானா, பின்னர் அவர் தொடர்ந்து இதேபோல் பேசியதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதனால் மனமுடைந்த ரெஹானா, தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து ரெஹானா எழுதிய 12 பக்க தற்கொலை கடிதத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் தனது மரணத்திற்கு முந்தைய மனப்போராட்டங்களையும், ஷாஜகானின் ஏமாற்றத்தையும் விரிவாக எழுதியுள்ளதாகத் தெரிகிறது.
“ஷாஜகானுக்கு மதுப்பழக்கம் இருப்பதும், பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. குடும்பத்தினர் வற்புறுத்தலால் மட்டுமே திருமணத்திற்குச் சம்மதித்த அவர், எங்கள் மகளின் வாழ்வைச் சிதைத்துவிட்டார்,” என்று ரெஹானாவின் பெற்றோர் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரெஹானாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மென்பொறியாளர் ஷாஜகானை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை திருமணத்திற்கு முன்பே முடிவுக்கு வந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
