கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளுக்குத் தமிழக அரசு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் அல்லது ரோடு ஷோ (Road Show) நடத்த வேண்டுமென்றால் கடும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, பொதுக்கூட்டம் நடத்த 10 முதல் 21 நாட்களுக்கு முன்பே அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். கூட்டத்தில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள் என்றால், ஒரு மாதத்திற்கு முன்பே விண்ணப்பிப்பது கட்டாயம். குறிப்பாக, ரோடு ஷோக்களை 3 மணி நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்றும், கூட்டத்தில் பங்கேற்கும் கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் நீண்ட நேரம் வெயிலில் நிற்காமல் இருப்பதை அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு ‘செக்’ வைத்துள்ளது.
