நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கிய பிறகு நடித்துள்ள கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு வழங்க உள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்தது.
படத்தின் அரசியல் வசனங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் நீதிமன்றத்தை நாடியது.
நீதிமன்ற விசாரணையின் போது, தணிக்கைக் குழு பரிந்துரைத்த மாற்றங்களைச் செய்தும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகக் கூறி யாரோ அளித்த புகாரால் சான்றிதழ் வழங்க மறுப்பதாகத் தயாரிப்புத் தரப்பு வாதிட்டது.
சுமார் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் உடனடியாகச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மறுபுறம், தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் ராணுவ இலச்சினைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் பாதுகாப்புத் துறை நிபுணர்களின் ஆலோசனை தேவை என்றும், 14 காட்சிகளை நீக்கப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் மறுஆய்வுக் குழுவின் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி. ஆஷா, இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்குகிறார். தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான இழுபறியால், ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு படத்திற்குச் சாதகமாக அமையுமா அல்லது ரிலீஸ் தேதி மேலும் தள்ளிப்போகுமா என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
