’ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைச் சிக்கலால் இன்று வெளியாகாதது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தாலும், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு மெகா அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளபதி விஜய்யின் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களான ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ ஆகிய இரண்டு படங்களும் இன்று (ஜனவரி 9) திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்படும் (Re-release) எனத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது. ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போன சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு, தியேட்டர்களில் விஜய்யின் மாஸ் காட்சிகளைக் காணக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இன்று காலை 10:30 மணிக்கு ‘ஜனநாயகன்’ வழக்கின் தீர்ப்பு வரவுள்ள நிலையில், அதுவரை காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த ரீ-ரிலீஸ் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, ‘லியோ’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய இரண்டுமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவானவை என்பதால், தியேட்டர்களில் ரசிகர்களின் கொண்டாட்டம் இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது. “ஜனநாயகன் வர லேட் ஆனாலும், தளபதி தரிசனம் மிஸ் ஆகாது” என்று உற்சாகத்துடன் பதிவிட்டு வரும் ரசிகர்கள், “நீங்க மாஸ்டர் படத்துக்குப் போறீங்களா இல்ல லியோ படத்துக்குப் போறீங்களா?” எனத் தங்களுக்குள் விவாதித்து வருகின்றனர்.
