நவீன கார்ப்பரேட் உலகில் ஊழியர்களின் வஃபாதாரிக்கு (Loyalty) மதிப்பிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பும் விதமாக ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒரு தனியார் நிறுவனத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த 70 வயது முதியவர் ஒருவர், அந்த நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனத்தால் (MNC) கையகப்படுத்தப்பட்ட பிறகு, ஈவு இரக்கமின்றி வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

அந்த முதியவர் அந்த நிறுவனத்தில் பலரை வேலைக்கு எடுத்தவர் மற்றும் பலருக்கு வழிகாட்டியாக இருந்தவர் என்ற போதிலும், புதிய நிர்வாகம் அவரைத் தேவையற்ற செலவாகக் கருதி ‘பெர்பார்மன்ஸ் இம்ப்ரூவ்மென்ட் பிளான்’ (PIP) என்ற பெயரில் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் வேலையை விட்டு நீக்கப்பட்ட மற்ற இளைய ஊழியர்களுக்குக் கூடப் பிரிப்புத் தொகை (Severance Pay) வழங்கப்பட்ட நிலையில், 50 ஆண்டுகள் உழைத்த இந்த மூத்த மேலாளருக்கு ஒரு ரூபாய் கூட செட்டில்மென்ட் வழங்காமல், பிஐபி இலக்குகளை எட்டவில்லை என்று கூறி எவ்வித மரியாதையும் இன்றி அனுப்பியுள்ளது.

இது குறித்து அந்த மேலாளரின் கீழ் பணியாற்றிய ஊழியர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட உருக்கமான கருத்து, தற்போது கார்ப்பரேட் உலகின் கசப்பான முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள், மனித உணர்வுகளையும் நீண்ட கால உழைப்பையும் காலில் போட்டு மிதிப்பது ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.