மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து பல்வேறு அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நீட் தேர்வில் பல குளறுபடிகள் உள்ளதாகக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து தமிழக அரசியல் மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், பிற கட்சிகளில் உள்ள தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்கள் கட்சியின் தலைமை மீது நம்பிக்கை இழந்த காரணத்தினாலேயே தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், திமுகவைச் சாடிய அவர், “முன்பு கருணாநிதி குடும்பமாக இருந்த திமுக, தற்போது ஸ்டாலின் குடும்பமாக மட்டுமே மாறிப்போயுள்ளது” என்றும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் கடந்த காலங்களில் எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஆனால் தற்போதைய முதலமைச்சர் அதன் பணிகளை விரைந்து முடிக்க தீவிர முயற்சி எடுத்து வருவதால் விரைவில் எய்ம்ஸ் பணிகள் நிறைவுபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி விவகாரம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அடுத்த சில வருடங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால், அதிமுகவை பாஜகவுடன் இணைக்கக் கூட அவர் தயங்கமாட்டார் என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், 40 முதல் 50 ஆண்டுகளாக அதிமுகவிற்காக ரத்தம் சிந்தி உழைத்த உண்மையான தொண்டர்கள் தற்போது முற்றிலும் கைவிடப்பட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார். ஈபிஎஸ்ஸின் அரசியல் நகர்வுகளையும், திமுகவின் குடும்ப அரசியலையும் ஒரே மேடையில் அமைச்சர் நிர்மல் குமார் வெளுத்து வாங்கியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
