“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர்ச் சூழல் இன்னும் முடிவுக்கு வராததால் சர்வதேச அளவில் எரிவாயு விலை ஏற்றம் தொடர்ந்து வரும் நிலையில், அதன் நேரடித் தாக்கமாக இந்தியாவில் சமையல் சிலிண்டர்களின் விலை கடுமையாக உயர்ந்து பொதுமக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்கத்தில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எல்.பி.ஜி சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டு 928 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படாது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இருப்பினும், வணிக சிலிண்டரின் விலை கடந்த 3 மாதங்களில் மட்டும் 81 சதவீதம் வரை அதிகரித்து, ஒரே நாளில் 990 ரூபாய் வரை உயர்ந்ததுடன், கடந்த ஜூன் 1 அன்று மேலும் 46 ரூபாய் அதிகரிக்கப்பட்டு தற்பொழுது 3,283 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

வணிக சிலிண்டர் விலை உயர்வால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையும் உயரும் என்று அஞ்சப்பட்டபடியே, இன்று அதிரடியாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை மேலும் 29 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அதிரடி விலை உயர்வின் காரணமாக, சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை 957 ரூபாய் 50 காசுகளாக அதிகரித்துள்ளது, இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது.”