தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ தென்றல் குமார், கல்வித்துறை மற்றும் நீட் தேர்வு குறித்த தனது அதிரடியான கருத்துக்களைப் பதிவு செய்தார். அப்போது பேசிய அவர், தற்போதைய நீட் தேர்வு முறையினால் ஏழை எளிய மாணவர்களால் தொடர்ந்து படிக்க முடியாத இக்கட்டான சூழல் நிலவுவதாகக் கூறினார்.

மருத்துவ மாணவர் சேர்க்கை முறையில் முறையான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், நீட் தேர்வு மூலம் 50 சதவீதமும், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் மூலம் 50 சதவீதமும் கணக்கிடப்பட்டு சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனத் தனது யோசனையை முன்வைத்தார்.

மேலும் நுழைவுத் தேர்வு மற்றும் எக்சிட் தேர்வு போன்ற முறைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்திக் பேசினார். அப்போது நீதித்துறையின் தீர்ப்புகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், கூட்டாட்சித் தத்துவத்தின் ஒத்திசைவு இல்லாமலேயே நீதிபதிகள் எவ்வாறு இத்தகைய தீர்ப்புகளை வழங்க முடியும் என்ற ரீதியில் சில கேள்விகளை எழுப்ப முற்பட்டார். அவரது இந்தக் கருத்து சட்டமன்றத்தில் சற்றே பரபரப்பான சூழலை உருவாக்கியதுடன், உடனடியாக இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

உடனே குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன், நீதிபதிகள் மற்றும் தீர்ப்புகள் குறித்த விவாத எல்லைகளுக்குள் செல்லக் கூடாது என்று அவருக்குத் தெளிவாக அறிவுறுத்தினார். மேலும், தாங்கள் முன்வைக்கும் பரிந்துரைகளுடன் உரையை முடித்துக் கொள்ளுமாறு கூறிய அவர், உடனடியாக அந்த எம்.எல்.ஏ-வை இருக்கையில் அமர வைத்தார். இந்தச் சுவாரஸ்யமான சட்டமன்ற நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.