பாகிஸ்தான் நாட்டில் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் மசோதா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா சட்டம் உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது “பாகிஸ்தானின் அரசு நிறுவனங்களான ராணுவம் நீதித்துறை மற்றும் ஆயுதப்படைகளை யாரேனும் அவதூறாக பேசினாலோ அல்லது தவறான தகவல்களை பரப்பினாலோ அவர்களுக்கு ஐந்தாண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் மற்றும் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை இரண்டுமே விதிக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் குற்றவாளிகள் எந்தவித பிடிவாரட்டும் இல்லாமல் கைது செய்யப்படுவார்கள்” என அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது “சமீப காலமாக நீதித்துறை மற்றும் ராணுவம் போன்ற அரசு சார்ந்த நிறுவனங்கள் மீது அவதூறான இழிவான மற்றும் கொடூரமான தாக்குதல்களை நம் நாடு கண்டு வருகின்றது. மேலும் சிலர் தங்களுடைய சுயநல நோக்கங்களுக்காக வேண்டுமென்றே அரசு பற்றி தவறான தகவல்களையும் பிரச்சாரங்களையும் தொடங்கியுள்ளனர். இதற்கு தீர்வு காணவே இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.