ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணோ தேவி கோவில் பாதையில், கடந்த 5 ஆண்டுகளாகக் காணாமல் போன தனது அண்ணனைத் தங்கை எதிர்பாராத விதமாகக் கண்டுபிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் திடீரென மாயமானார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆண்டுகள் கடந்த நிலையில், அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், அந்த வாலிபரின் தங்கை அண்மையில் வைஷ்ணோ தேவி கோவிலுக்குத் தரிசனம் செய்யச் சென்றுள்ளார். மலைப்பாதையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அழுக்கான ஆடைகளுடன், மிகவும் நலிந்த நிலையில் அங்கிருந்த ஒருவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அவர் வேறு யாருமல்ல, 5 ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்த தனது அண்ணன் என்பதைத் தங்கை அடையாளம் கண்டுகொண்டார். கண்டவுடன் அண்ணனைக் கட்டிப்பிடித்து அவர் கதறி அழுத காட்சி அங்கிருந்த பக்தர்களைக் கண் கலங்கச் செய்தது. 5 ஆண்டு காலக் காத்திருப்புக்கு, அந்தப் புனிதத் தலத்தில் ஒரு அற்புதமாக விடை கிடைத்துள்ளது.

இந்தச் சந்திப்பை அங்கிருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து ‘இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். 5 ஆண்டு காலக் காத்திருப்பு.. இறுதியில் இந்தத் தருணம். வைஷ்ணோ தேவி புண்ணியத் தலத்தில் ஒரு சகோதரி பிரிந்த தனது சகோதரனை மீண்டும் சந்தித்துள்ளார். இது வெறும் சந்திப்பல்ல; நம்பிக்கை மற்றும் பிரார்த்தனைக்குக் கிடைத்த அற்புதம் என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “இது அன்னை வைஷ்ணோ தேவியின் அற்புதம்” என்று ஒரு தரப்பினரும், “அந்த இளைஞர் ஏன் 5 ஆண்டுகளாக வீட்டுக்குத் தொடர்பு கொள்ளவில்லை? ஏன் இந்த நிலைமை?” என மற்றொரு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எது எப்படியோ, பாசப் போராட்டத்தில் ஒரு குடும்பம் மீண்டும் இணைந்துள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.