திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், முன்னாள் காதலன் செய்த ‘டிஜிட்டல்’ சித்திரவதையால் மனமுடைந்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம், பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ பிராதர் (22). இவருக்கும் ஒரு இளைஞருக்கும் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி திருமணம் நடத்தத் திட்டமிடப்பட்டு, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சடங்குகள் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளன.
இதற்கிடையில், ஜெயஸ்ரீக்கும் ஸ்ரீசைல் பதனூர் என்ற இளைஞருக்கும் இடையே முன்பு காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஜெயஸ்ரீக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிவானதை அறிந்த ஸ்ரீசைல், ஆத்திரமடைந்துள்ளார். அந்தத் திருமணத்தைத் தடுக்கும் நோக்கில், ஜெயஸ்ரீயுடன் தான் எடுத்துக்கொண்ட சில தனிப்பட்ட புகைப்படங்களை, ஜெயஸ்ரீயைத் திருமணம் செய்யவிருந்த மாப்பிள்ளையின் வீட்டாருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
புகைப்படங்களைப் பார்த்த மாப்பிள்ளை வீட்டார், அதிர்ச்சியடைந்து திருமணத்தை உடனடியாக ரத்து செய்துள்ளனர். இதனால் சமூக ரீதியாகவும், மன ரீதியாகவும் ஜெயஸ்ரீ கடும் பாதிப்புக்கு உள்ளானார். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மத்தியில் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் நிலைகுலைந்த ஜெயஸ்ரீ, நேற்று மாலை கிராமத்தில் உள்ள மசூதி அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்த கிராம மக்கள் அவரை மீட்க முயன்றனர், ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். ஜெயஸ்ரீயின் மரணம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிந்தகி போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயஸ்ரீயின் தற்கொலைக்குக் காரணமான ஸ்ரீசைல் பதனூர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் டிஜிட்டல் ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு பெண்ணின் வாழ்க்கையையே சிதைத்த அந்த இளைஞனைத் தேடி வருகிறோம். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
