மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், சாக்கு மூட்டையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இளைஞர், கள்ளக்காதல் விவகாரத்தில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சாகர் மாவட்டம் பண்டா பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர அகிர்வார் (38). கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி காலை, கான்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகம் அருகே ரத்தம் படிந்த சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் சிதைந்த நிலையில் ஒரு ஆணின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், மகேந்திர அகிர்வார் அதே கிராமத்தைச் சேர்ந்த ஹரிசங்கர் அகிர்வார் என்பவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்தது. பலமுறை எச்சரித்தும் மகேந்திரா தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளாததால், அவரைத் தீர்த்துக்கட்ட ஹரிசங்கர் தனது குடும்பத்துடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியுள்ளார். ஏப்ரல் 10-ஆம் தேதி மாலை, சமரசம் செய்து கொள்வதாகக் கூறி சாகர் நகரில் உள்ள தனது மைத்துனர் வீட்டிற்கு மகேந்திராவை ஹரிசங்கர் விருந்துக்கு அழைத்துள்ளார். அங்கு மது விருந்து முடிந்த பின், மகேந்திரா உணவு அருந்த அமர்ந்துள்ளார்.

அவர் கையில் ஒரு ரொட்டித் துண்டுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போதே, ஹரிசங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் மறைத்து வைத்திருந்த கோடரியால் மகேந்திராவின் தலை மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகத் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மகேந்திரா உயிரிழந்தார். பின்னர், சடலத்தை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, ஒரு சரக்கு வாகனத்தின் மூலம் நள்ளிரவு 3 மணி அளவில் நெடுஞ்சாலை ஓரம் வீசிச் சென்றுள்ளனர். சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, அவரது கையில் காய்ந்த ரொட்டித் துண்டு அப்படியே இருந்தது, அவர் சாப்பிடும்போதே கொல்லப்பட்டதை உறுதி செய்தது.

இந்தக் கொலை தொடர்பாகக் கூடுதல் எஸ்பி லோகேஷ் சின்கா கூறுகையில், கள்ளக்காதல் விவகாரத்தால் இந்தத் திட்டமிட்ட கொலை நடந்துள்ளது. முக்கியக் குற்றவாளி ஹரிசங்கர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், போலீஸ் கண்காணிப்பில் உள்ளார். தலைமறைவாக உள்ள அவரது மனைவி, மகன் சத்யம் மற்றும் உறவினர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்என்று தெரிவித்தார். இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.