தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் வருகை குறித்துப் பேசிய ஜேம்ஸ் வசந்தன், விஜய்க்கு ஏற்கனவே இருக்கும் பிரம்மாண்டமான செல்வாக்கை யாரும் மறுக்க முடியாது என்று குறிப்பிட்டார். ஆனால், இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவு கொண்ட ஒரு தலைவர், தேர்தலைச் சந்திப்பதற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அந்த மண்ணில் இறங்கி வேலை செய்திருக்க வேண்டும் என அவர் தனது கருத்தைப் பதிவு செய்தார். ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களின் தோள் மேல் கை போட்டு, அவர்களோடு பழகி, “உங்களுக்கு உதவ நான் இருக்கிறேன்” என்கிற நம்பிக்கையை விஜய் ஏற்படுத்தியிருக்க வேண்டும் என ஜேம்ஸ் வசந்தன் சுட்டிக்காட்டினார்.

​வாழ்க்கையில் பணம், புகழ் என எல்லாவற்றையும் அடைந்து செட்டில் ஆன பிறகு, மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து அவர்களின் கஷ்டங்களை நேரில் உணர்ந்து தேர்தலைச் சந்தித்திருந்தால் விஜய்க்கு இன்னும் மிகப்பெரிய வரவேற்பு இருந்திருக்கும் என அவர் தெரிவித்தார். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவது போல வந்துவிட்டுப் போவதற்கும், மற்ற அரசியல்வாதிகளைப் போலத் தொடர்ந்து மக்கள் களத்தில் நிற்பதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகவும், அதை மக்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த எதார்த்தமான அரசியல் பார்வை இப்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.