கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருச்சூர் மாவட்டம் அம்பலகவு பகுதியைச் சேர்ந்தவர் ஷில்பா (30). இவருக்கு அக்ஷயஜித் (5) என்ற மகன் இருந்தான். நேற்று ஷில்பா தனது வீட்டில் உள்ள அறையில் மகன் அக்ஷயஜித்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அதே அறையில் ஷில்பாவும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
வெளியே சென்றிருந்த ஷில்பாவின் கணவர் வீடு திரும்பியபோது, அறையின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்து கதவை உடைத்துப் பார்த்தார். அப்போது ஷில்பா தூக்கில் தொங்கிய நிலையிலும், மகன் சடலமாகக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகனைக் கொன்றுவிட்டு ஷில்பா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
