மத்திய கிழக்கில் போர் தொடங்கி மூன்று வாரங்களைக் கடந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத மிகக் கடுமையான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “இன்னும் 48 மணி நேரத்திற்குள் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) முழுமையாகத் திறக்க வேண்டும்; தவறினால் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது அமெரிக்கா பயங்கரத் தாக்குதலை நடத்தும்” என அதிரடியாக அறிவித்துள்ளார்.

குறிப்பாக, ஈரானின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து இந்தத் தாக்குதல் தொடங்கும் என்றும், ஒட்டுமொத்த மின் கட்டமைப்பையும் அமெரிக்கா நிர்மூலமாக்கும் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், ஈரானின் நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவும், உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

ஏற்கனவே ஈரானிய எண்ணெய் மீதான தடைகளில் சில தளர்வுகளை அளித்து 140 மில்லியன் பீப்பாய் எண்ணெயைச் சந்தைக்குக் கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில், ஈரானின் மின் விநியோகத்தைக் குறிவைத்து டிரம்ப் விடுத்துள்ள இந்த 48 மணி நேர ‘கெடு’ ஆசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.