ஆதி பராசக்தியின் அம்சமான கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் அவதார தினமான சித்திரை மாத வளர்பிறை தசமி நாள் வாசவி ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆந்திராவின் பெனுகொண்டா நகரில் குசும ஸ்ரேஷ்டி – குசுமாம்பா தம்பதிக்கு மகளாகப் பிறந்த வாசவி தேவி, பிறந்தவுடனேயே நான்கு கரங்களுடன் சங்கு சக்கர ஏந்திய தெய்வீகக் கோலத்தில் காட்சி தந்து, பின்பு சாதாரணக் குழந்தையாக வளர்ந்தார்.
வாசவி திருமண வயதை அடைந்தபோது, ஈசனையே மணாளனாக அடையத் தவம் இருந்தார். ஆனால், அந்த நாட்டின் மன்னன் விஷ்ணுவர்த்தனன் அவளது அழகைக் கேள்விப்பட்டுத் திருமணம் செய்ய விரும்பினான். வாசவி அதை மறுக்கவே, கோபமடைந்த மன்னன் ஊரையே அழிப்பதாக எச்சரித்தான். தன் குலத்தைக் காக்கவும், மன்னனின் அநீதியை எதிர்த்தும் வாசவி தேவி அக்னி பிரவேசம் செய்ய முடிவு செய்தார்.
தனக்காக உயிரைத் தியாகம் செய்யத் துணிந்த வாசவி தேவி, மக்களுக்குத் தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அருளினார். “என்னை கன்னிகா பரமேஸ்வரி என்று சரணடைபவர்களைச் சகல தீங்கிலிருந்தும் காப்பேன்” என்று வாக்குறுதி அளித்து அக்னி குண்டத்தில் இறங்கினார். அதே கணத்தில் அநீதி இழைத்த மன்னன் விஷ்ணுவர்த்தனனின் தலை வெடித்துச் சிதறியது. பின்னர் மன்னனின் மகன் ராஜராஜ நரேந்திரன் வாசவி தேவிக்குக் கோவில் எழுப்பி வழிபடத் தொடங்கினான்.
கலியுகத்தில் பக்தர்களின் துன்பம் தீர்க்க அன்னை மேற்கொண்ட இந்த அவதாரம், அமைதி மற்றும் தியாகத்தின் அடையாளமாகப் போற்றப்படுகிறது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் அன்னை கன்னிகா பரமேஸ்வரிக்குக் கோவில்கள் உள்ளன. அன்னையை விரதமிருந்து வழிபடுபவர்களுக்குச் சத்ரு பயம் நீங்கி, வேண்டிய செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.
குறிப்பாகத் திருமண வயதில் உள்ள கன்னிப்பெண்கள், நல்ல கணவன் அமையவும் மாங்கல்ய பலம் பெறவும் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியை 48 நாட்கள் தியானித்து விரதம் இருந்தால், அன்னை மனம் மகிழ்ந்து அவர்களுக்கு உடனடியாகத் திருமண வரம் அருள்வாள் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாக உள்ளது.
