சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் சுமார் 40 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலம் ஒன்றை மர்ம கும்பல் இரவோடு இரவாகத் திருடிச் சென்ற துணிகரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 10 டன் எடையுள்ள இந்தப் பாலத்தை, 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று நவீன கேஸ் கட்டர் கருவிகளைப் பயன்படுத்தி சிறு சிறு துண்டுகளாக வெட்டி, லாரிகளில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
மேலும் ஜனவரி 16-ம் தேதி இரவு வரை வழக்கம்போல் இருந்த பாலம், மறுநாள் காலை காணாமல் போயிருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் உறைந்து போயினர். இந்த விசித்திரத் திருட்டு குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, தீவிர விசாரணை நடத்தி தற்போது வரை 5 பேரை கைது செய்துள்ளது.
இதனால் அவர்களிடமிருந்து திருடப்பட்ட பாலத்தின் சில இரும்புத் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டு பீகார் மாநிலத்திலும் இதே பாணியில் ஒரு இரும்புப் பாலம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அரசு அதிகாரிகளைப் போலவோ அல்லது பராமரிப்புப் பணியாளர்களைப் போலவோ நடித்து, மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இக்கும்பல் இத்தகைய துணிகரச் செயலில் ஈடுபட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
