இந்தியாவால் தேடப்படும் சுமார் 70 குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கியிருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024-25 காலகட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், விஜய் மல்லையா மற்றும் லலித் மோடி உள்ளிட்ட பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த முக்கிய நபர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக, இந்தியப் புலனாய்வு அமைப்புகள் சர்வதேச நாடுகளுக்கு 74 கடிதங்களை அனுப்பியுள்ளன. இதில் சிபிஐ தரப்பில் 54 கடிதங்களும், மாநிலப் புலனாய்வு பிரிவுகள் மூலம் 20 கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த ஓராண்டில் மட்டும் வெளிநாடுகளில் பதுங்கியிருந்த 27 குற்றவாளிகளை இந்திய அரசு வெற்றிகரமாகத் தாயகத்திற்கு அழைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதே சமயம், மற்ற நாடுகளால் தேடப்படும் சுமார் 203 குற்றவாளிகள் தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சர்வதேச அளவில் குற்றவாளிகளைக் கண்டறிந்து நாடுகடத்தும் நடவடிக்கைகளில் இந்தியப் புலனாய்வுத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், மற்ற நாடுகளுடன் இணைந்து சட்ட ரீதியான விசாரணைகளையும் முடுக்கி விட்டுள்ளனர்.
