திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் மதிவாணன்(35)-கௌசல்யா(29) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 1/2 வயதுடைய சாரா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மதிவாணன் தனது மனைவி, குழந்தை மாமனார் துரைராஜ்(52), மாமியார் தவமணி(46) ஆகியோருடன் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றுள்ளார். அங்கு திருமணம் முடிந்ததும் அதே காரில் நேற்று முன்தினம் தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இதேபோல் விழுப்புரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிகொண்டு அரசு பேருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதிவாணனின் கார் முன்னால் செல்ல அரசு பேருந்து பின்னால் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவட்டி பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து கார் மீது பயங்கரமாக மோதியது. மேலும் பேருந்து இடது புறத்தில் சிக்கி கொண்ட கார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு வேப்ப மரத்தின் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மதிவாணன், கௌசல்யா, சாரா, தவமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த துரைராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.