ஆந்திர மாநிலம் பாபட்லா என்ற மாவட்டத்தில் வசிப்பவர்கள் சுபரா (56) மற்றும் ரகுமான் (48).  இவர்கள் நகை வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை வாங்குவதற்காக கடந்த 3-ந்தேதி ஆம்னி பஸ்சில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு  வந்தனர். நகை வாங்குவதற்காக ரூ.1 கோடியே 40 லட்ச பணத்துடன் சென்னை வால்டாக்ஸ் சாலையில் இறங்கி உள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏறி  சவுகார்பேட்டைக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து யானைக்கவுனி வீரப்பன் தெரு சந்திப்பில் ஆட்டோ சென்றபோது, அங்கு போலீஸ் போல் நடித்து வாகன சோதனையில் 5 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் நகை வியாபாரிகளிடமும் ஏமாற்றி, அவர்கள் வைத்திருந்த ரூ.1 கோடியே 40 லட்ச பணத்தை  கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு மற்றும் மராட்டியம், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இம்ரான் (39) ஒகேனக்கல் பகுதியில் பதுங்கி இருந்தது தனிப்படை போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு, பின் கைது செய்யப்பட்டார். மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் இருந்து இருவர் நீலகிரி மற்றும் சேலம் பகுதிகளில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களையும் கைது செய்த போலீசார், அந்த   மூவரிடம் இருந்தும் ரூ.60 லட்சம் பணம், 1 காரை பறிமுதல் செய்தனர். பின் இவர்களை சென்னை அழைத்து வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.