கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதி அருகே உள்ள அருள்ஞானபுரம் கிராமத்தில் தேவ சந்துரு-வேணி அனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் ரஷிகா (18), மகன் ராகுல். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தேவ சந்துரு அவரது குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றதால் வேணி தன் குழந்தைகளுடன் செண்பகராமன் புதூர் கம்பிபாலம் பகுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் இவருடைய மகள் ரஷிகா தடிக்காரன் கோணத்தில் உள்ள ஒரு செவிலியர் கல்லூரியில் பயின்று வந்தபோது ஒரு நபரை காதலித்துள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்களாக காதலித்து வந்த நிலையில் ரஷிகாவின் தாயாருக்கு இந்த தகவல் தெரிய வந்தது. உடனே தனது மகளை எச்சரித்த அவர் அவரிடம் இருந்த செல்போனை வாங்கினார். இதனால் ரஷிகா மன அழுத்தத்தில் இருந்த நிலையில் நேற்று காலை குளிப்பதற்காக  சென்ற நிலையில் நீண்ட நேரமாக கதவை திறக்காததால், சந்தேகமடைந்த தாய் வேணி கதவைத் தட்டினார்.

ஆனால் கதவு திறக்கப்படாததால் கண்ணாடியை உடைத்து ஜன்னல் வழியே எட்டி பார்த்தபோது ரஷிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வேணி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து ரஷிகாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.