கர்நாடகாவின் தவணாகெரே மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுமி கதீரா பானு, தெருநாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி, வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது, தெருநாய் தாக்கி அவரது முகம் மற்றும் உடல் பல இடங்களில் கடித்து படுகாயம் ஏற்படுத்தியது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் பெங்களூருவில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், சுமார் நான்கு மாதங்களாக உயிருக்கு போராடிய அவர், இறுதியில் சிகிச்சை பலனின்றி பரிதமமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம், கர்நாடகாவில் தெருநாய் தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இதேநேரத்தில், நாய் கடித்து ரேபிஸ் நோய் காரணமாக இறப்பு அதிகரித்து வருவதால், அனைத்து தெருநாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி, மற்றும் கண்காணிப்பு கட்டாயம் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.  ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக விலங்கு நல ஆர்வலர்கள்  தெருக்களில் போராட்டம் நடத்தி  வருவது குறிப்பிடத்தக்கது.