பிரிட்டனை சேர்ந்த இளநிலை மருத்துவர்கள் தங்களுக்கு கூடுதலாக 35 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் அதில் அரசுடன் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கடந்த பல மாதங்களாக இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று, உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களினால் ஏற்கனவே பொருளாதார அளவில் மிகப்பெரிய பாதிப்பை பிரிட்டன் சந்தித்துள்ளது. இந்த நிலையில் இளநிலை மருத்துவர்களுக்கு 35% அதிக சம்பள உயர்வு வழங்கினால் பணவீக்கம் ஏற்பட்டு ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனாலும் மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தினால் காத்திருக்கும் நோயாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. இதனால் இளநிலை மருத்துவர்களுக்கு 8.8 சதவீதம் முதலாம் ஆண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு 10.3 சதவீதம் மருத்துவ ஆலோசகர்களுக்கு 6 சதவீதம் என சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பால் நாடு முழுவதிலும் இருக்கும் 1  லட்சத்து 50 ஆயிரம் இளநிலை மருத்துவர்கள் பயனடைவார்கள் என்று பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.