அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் வசித்து வந்தவர் கருப்பர் இனத்தை சேர்ந்த 21 வயதான டாகியா.  இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது காரில் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவரிடம் குற்ற விசாரணை மேற்கொள்ள காவல் துறையினர் காரை வழிமறித்து கீழே இறங்கச் சொல்லிக் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு டாகியா மறுத்ததால் அதிகாரி ஒருவர் நீங்கள் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது இங்கிருந்து செல்ல வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார். ஆனால் டாகியா மறுப்பு தெரிவித்ததோடு காரை அங்கிருந்து நகர்த்த முயற்சித்துள்ளார். அப்போது ஒரு காவல் அதிகாரி துப்பாக்கியுடன் காருக்கு முன் சென்று டாகியாவை மிரட்டியுள்ளார்.

அதனை பொருட்படுத்தாமல் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பியதால் காவல் அதிகாரி ஒருவர் டாகியாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்து டாகியாவை வெளியே கொண்டு வரும் முயற்சியில் அவரும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த குற்றச்சாட்டில் தொடர்புடைய அதிகாரிகள் ஊதியத்துடன் நிர்வாக விடுப்பில் பணியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் கறுப்பின மக்களின் மீது அமெரிக்க காவல்துறை அதிகாரிகள் அண்மைக்காலமாக கடுமையாக நடந்து வருவதாக பயனர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.