அடுத்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடன் அவர்களும் குடியரசு கட்சியின் சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். அதேபோன்று அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக குடியரசு கட்சியை சார்ந்த இந்திய வம்சாவளியினர்  விவேக் ராமசாமி நிக்கிஹாலே  உட்பட பலர் களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில் விவேக்  ராமசாமிக்கு ஆதரவுகள் அதிகம் இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் அவருடைய தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிக அளவில் நன்கொடையும் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் விவேக் ராமசாமி அவர்களுக்கு அதிபர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால் ட்ரம்புடன் சேர்ந்து துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ட்ரம்புக்கு தனக்கும் சில விவகாரங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் கொள்கை ரீதியாக 90% எங்களுக்கிடையில் நல்ல உடன்பாடு உள்ளது. ட்ரம்பின் வெளியுறவு கொள்கை மற்றும் வர்த்தகம் தொடர்பான திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு தன்னால்  எடுத்துச் செல்ல முடியும் என்றும் விவேக் ராமசாமி கூறியுள்ளார்.