தமிழக அரசியலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி கடந்த சில தேர்தல்களாக வலுவாக இருந்து வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியினரின் “ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே பல காங்கிரஸ் நிர்வாகிகள் பேசி வந்த நிலையில், இன்று (பிப்.15) மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திமுக தலைமைக்கு ஒரு மறைமுக நெருக்கடியைக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
குறிப்பாக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அமைச்சரவையில் காங்கிரஸுக்கும் பங்கு அளிக்கப்பட வேண்டும், அதிகப்படியான தொகுதிகளைப் பெற வேண்டும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் 30 சதவீத இடங்களைப் பெற வேண்டும் உள்ளிட்ட அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. “வெறும் ஓட்டுப் போடும் இயந்திரமாக மட்டும் நாங்கள் இருக்க மாட்டோம், அதிகாரத்திலும் பங்கு வேண்டும்” என்ற காங்கிரஸின் இந்தத் திடீர் போக்கினால் கூட்டணிக்குள் விரிசல் விழுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் காலமிருந்தாலும், இப்போதே இந்த “பங்கு” விவகாரம் தமிழக அரசியலைத் தகிப்படையச் செய்துள்ளது.
