தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் திருமண விழாவில் பங்கேற்றது, தமிழக அரசியலில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரர் சுனில் ரெட்டியின் மகன் திருமணம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜய் மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி இடையிலான சந்திப்பு, வெறும் நட்பு ரீதியானது மட்டுமல்ல, அதன் பின்னால் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாகத் த.வெ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் பலவும் ஜெகன்மோகன் ரெட்டியைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது விஜய் மக்களைச் சந்திக்கும் விதம் முதல், மேடையில் அணியும் வெள்ளைச் சட்டை மற்றும் காக்கி பேண்ட் வரை விஜய்க்கு ஜெகனே ‘ரோல் மாடல்’ ஆகத் தெரிகிறார்.

தேசிய அளவில் பெரிய கட்சிகளுடன் பிணைப்பு இல்லாத நிலையில், இரு தலைவர்களும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஆந்திர எல்லைப் பகுதிகள் மற்றும் மத்திய மாவட்டங்களில் ரெட்டி சமூகம், தெலுங்கு மொழி பேசுவோர் மற்றும் கிறிஸ்துவ மக்கள் கணிசமாக உள்ளனர். தற்போது தி.மு.க. வசம் உள்ள இந்த வாக்கு வங்கியைத் தன் பக்கம் ஈர்க்க ஜெகனின் உதவி மற்றும் ஆதரவை விஜய் நாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள உயர் மட்டத் தொடர்புகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த உதவுமாறு விஜய்யின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்குப் பதிலாக ஜெகன்மோகன் ரெட்டி சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது:

“உங்கள் பிரதான எதிரி தி.மு.க. என்றால், அவர்களைப் பற்றி மட்டும் மேடைகளில் பேசுங்கள். தேவையில்லாமல் டெல்லித் தலைமையைப் (மத்திய அரசு) பகைத்துக் கொள்ள வேண்டாம்.”

தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்படும் சில சமூக வாக்கு வங்கிகளைப் பிரிக்க இந்த ‘மாஸ்டர் பிளான்’ உதவுமா என்பது வரும் தேர்தல்களில் தெரியவரும்.