தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், த.வெ.க. தலைவர் விஜய்யை நடிகை திரிஷாவுடன் ஒப்பிட்டுப் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் தரப்பினரும், குறிப்பாக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழியும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அநாகரிகமாகப் பேசுவதே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜனதாவின் அருவருக்கத்தக்க அரசியல். தமிழ்நாடு பா.ஜனதா தலைவரின் இந்தக் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார்.
இதேபோன்று திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இந்தியாவை ஆளும் கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது பொதுவெளியில் இயங்கும் ஒரு பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசுவது முறையல்ல. பெண்களைக் கண்ணியத்துடன் நடத்துவதே நாகரிக அரசியலுக்கு அழகு என்றார்.
இதேபோன்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளியிட்டுள்ள உள்ள பதிவில், “அரசியலில் ஒரு கட்சித் தலைவர் மீது விமர்சனம் இருந்தால், அதைத் தார்மீக ரீதியாக எதிர்கொள்ளுங்கள். அதை விடுத்து, ஒரு பெண்ணைப் பொதுவெளியில் ஆபாசமாகப் பேசுவது பெண்களை எப்படி வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம் என்கிற ஆபத்தான மனநிலையைக் காட்டுகிறது. இது பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் வெளிப்பாடு. தனது பேச்சுக்காக நயினார் நாகேந்திரன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் ஈன்று பதிவிட்டுள்ளார். மேலும் நயினார் நாகேந்திரன் கருத்திற்கு சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் கூட கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
