ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஏற்பட்ட பலத்த காயத்திலிருந்து மீண்டுள்ள இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், அந்த இக்கட்டான காலத்தில் தான் எதிர்கொண்ட உடல் ரீதியான மாற்றங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது, ஒரு கடினமான ‘கேட்ச்’ பிடிக்க முயன்ற ஸ்ரேயாஸ் ஐயருக்கு விலா எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அவர் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார்.
தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர், தனது உடல்நிலை குறித்துப் பேசியதாவது: “ஒரு மோசமான காயத்திலிருந்து மீண்டு மீண்டும் விளையாட்டுத் திடலுக்குத் திரும்புவது என்பது எப்போதும் சவாலான காரியம். அந்தக் காயத்தின் தீவிரத்தால் நான் சுமார் 7 கிலோ உடல் எடையை இழந்திருந்தேன்.
நல்ல வேளையாக, இரண்டு மாத இடைவிடாத சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் நல்ல உடல் தகுதியைப் பெற்றுள்ளேன். ஆனால், இழந்த அந்த 7 கிலோ எடையை மீண்டும் மீட்பதற்கு நான் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. நான் எப்போதும் சவால்களை விரும்புபவன் என்பதால், இதையும் ஒரு சவாலாக ஏற்று வெற்றிகரமாகக் கடந்து வந்துள்ளேன்,” எனத் தெரிவித்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடல் தகுதியுடன் திரும்புவது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. வரும் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐ.பி.எல். (IPL 2026) தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக அவர் களம் இறங்க உள்ளார். மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தலைமையேற்க உள்ளதால், பஞ்சாப் அணி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
