பொதுவாக எலக்ட்ரானிக் சாதனங்கள் தண்ணீரில் விழுந்தாலே முடிந்தது கதை என்றுதான் நினைப்போம். ஆனால், ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர் மூன்று மாதங்கள் உப்புத் தண்ணீரில் ஊறியும், இன்னும் பாட்டுப் பாடிக்கொண்டிருப்பதை யாராவது நம்ப முடியுமா? ஜேபிஎல் (JBL) நிறுவனத்தின் ஸ்பீக்கர் ஒன்று கடலில் தவறி விழுந்து, மூன்று மாதங்கள் கழித்து தற்போது கரை ஒதுங்கியுள்ளது. அந்த ஸ்பீக்கர் முழுவதும் கடல் சேறு, சிப்பிகள் மற்றும் பாசிகளால் மூடப்பட்டு அடையாளம் தெரியாத நிலையில் உள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், கடல் சகதியுடன் கிடக்கும் அந்த ஸ்பீக்கரை ஆன் செய்தபோது, அது மிகத் தெளிவாக இசையை ஒலிக்கச் செய்கிறது. இசைக்கு ஏற்ப அதன் மேல் ஒட்டியுள்ள சிப்பிகள் அதிருகின்றன. “இது ஜேபிஎல் நிறுவனத்திற்கு கிடைத்த மிகச்சிறந்த விளம்பரம்” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“இதைப் பார்த்த அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் டீமுக்கு 20 நாட்கள் விடுமுறை கொடுத்துவிடலாம், அந்த அளவுக்கு இது தரமான புரோமோஷன்” என ஒருவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

 “கடலில் மூன்று மாதங்கள் தாக்குப்பிடித்ததைப் பார்த்தால், இதை நாசா தயாரித்திருக்க வேண்டும் போல” என அதன் தரத்தை வியந்து பாராட்டுகின்றனர்.

ஏற்கனவே பிலிப்பைன்ஸில் வெள்ளத்தில் சிக்கி மூன்று நாட்கள் சேற்றில் புதைந்திருந்த ஐபோன் 17 ஒன்று, சுத்தம் செய்த பிறகு மீண்டும் வேலை செய்த சம்பவம் கடந்த ஆண்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.