பெங்களூருவில் சில நாட்களுக்கு முன்பு பூஜா என்ற பெண்ணின் உடல் அவரது அறையில் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கில் தற்போது போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பெண்ணின் அறையைச் சோதனையிட்டபோது, அங்குள்ள சுவர்களில் “அமைதி, அகங்காரம், நம்பிக்கை, திருப்தி, காதல் மற்றும் தனிமை” போன்ற வார்த்தைகள் எழுதப்பட்ட காகிதங்கள் ஒட்டப்பட்டிருந்தன.

மேலும் அறை முழுவதும் பல அட்டைகள் சிதறிக்கிடந்தன. கடந்த மூன்று மாதங்களாகவே பூஜாவின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

ரீசார்ஜ் செய்யாததால் அவரது எண் முடங்கிய நிலையில், அவர் யாரிடமும் பேசாமல் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு மன அழுத்தத்தில் வாழ்ந்து வந்ததாகப் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வேலையில் இல்லாத பூஜா, கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை மற்றும் செலவுகளை எப்படிச் சமாளித்தார்? அவருக்கு யாராவது பண உதவி செய்தார்களா? என்பது குறித்து அவரது வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

பூஜாவின் தந்தை கூறுகையில், கொரோனா காலத்தில் திருமணமான சில நாட்களிலேயே கணவர் இறந்ததால் பூஜா பெரும் அதிர்ச்சியில் இருந்ததாகவும், அதன் பிறகு யாரிடமும் பேசாமல் பெங்களூரு வந்துவிட்டதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தந்தை பெங்களூரு வந்து தேடியும் அவர் யாரையும் சந்திக்கவில்லை. தற்போது பூஜாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது ஒரு வருட செல்போன் அழைப்புகளை (CDR) ஆய்வு செய்து வரும் போலீசார், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.