மும்பை என்றாலே கூட்ட நெரிசலுக்குப் பஞ்சமிருக்காது, அதேபோல் திருட்டுச் சம்பவங்களுக்கும் குறைவிருக்காது என்பதற்கு சாட்சியாக ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
மும்பை அருகே உள்ள நைகான் ரயில் நிலையத்தில், பிளாட்பாரத்தில் இருந்த இருக்கையில் பயணி ஒருவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு இளைஞர், அந்தப் பயணி தூங்குவதை உறுதி செய்துகொண்டு மெதுவாக அருகில் சென்றார். யாரும் எதிர்பார்க்காத வகையில், தூங்கிக் கொண்டிருந்தவரைச் சற்றே நகர்த்திவிட்டு, அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை லாவகமாகத் திருடிவிட்டு அசால்ட்டாக அங்கிருந்து நடந்து சென்றார்.
View this post on Instagram
இந்த மொத்த சம்பவத்தையும் எதிர் பிளாட்பாரத்தில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பட்டப்பகலில், அதுவும் மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் நிலையத்தில் இவ்வளவு துணிச்சலாகத் திருட்டு நடந்தது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் போலீசார் இருந்தாலும், இது போன்ற திருட்டு கும்பல்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி கைவரிசை காட்டுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
