மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கர்ஜத் நகரில், வெறிநாய்க் கடிக்குள்ளான தெருநாய் ஒன்று திடீரென பொதுமக்களை ஓட ஓட விரட்டித் தாக்கியதில் 6 வயது சிறுவன் உட்பட 4 முதல் 5 பேர் படுகாயமடைந்தனர்.

அந்த நாய் ஒரு சிறுவனைக் கடித்து இழுத்துச் செல்லும் திடுக்கிடும் காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தெருநாய்களின் அச்சுறுத்தல் குறித்த கவலையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, மகாராஷ்டிராவில் நடப்பு 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 4.88 லட்சத்திற்கும் அதிகமான நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த நாய் கடி புள்ளிவிவரங்கள் தவறான முறையில் கணக்கிடப்பட்டுள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் தரப்பில் வாதிடப்படுகிறது.

நகராட்சி மருத்துவமனைகளில் விநியோகிக்கப்படும் ‘ஆன்டி-ரேபிஸ்’ தடுப்பூசி மருந்துகளின் எண்ணிக்கையை வைத்தே இந்தத் தரவுகள் சேகரிக்கப்படுவதால், உண்மையான பாதிப்பை விட புள்ளிவிவரங்கள் பல மடங்கு அதிகமாகக் காட்டப்பட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற பயத்தை உருவாக்குவதாக அவர்கள் கூறுகின்றனர்.

“>

 

மேலும், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் கடித்த சம்பவங்களும் இதிலேயே சேர்க்கப்படுவதாகவும், விலங்குகளுடன் பணிபுரியும் ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாகப் போட்டுக் கொள்ளும் தடுப்பூசிகளும் இந்த நாய் கடி கணக்கிலேயே சேர்க்கப்படுவதாகவும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.