சென்னையில் விசிகவின் உயர்நிலை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மக்களவைத் தேர்தல், திமுக உடனான தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பின் சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஏதேனும் இடைவெளி ஏற்படும் என நினைத்து அதில் நுழையலாம் என யாரும் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. பரஸ்பர புரிதலில் திமுகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்படும். கூட்டணி கட்சிகளுக்கு இடையே எந்த இடைவெளியும் ஏற்படாது. திமுக மற்றும்  காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படாது.

இலவு காத்த கிளியாக யாரும் காத்திருக்காதீர்கள். கொள்கை புரிதலோடு செயல்படுகிற கட்சிகள் தான் திமுக கூட்டணியில் உள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியேறாது. நாங்கள் திமுக கூட்டணியில் தான் உள்ளோம். திமுக கூட்டணியில் தான் இந்த தேர்தலிலும் பயணிப்போம். இதில் எந்த ஊசலாட்டமும் இல்லை. முதலில் 4 தொகுதிகளை கேட்டிருந்தோம். இப்போது 3 தொகுதிகளை கேட்டுள்ளோம். 2 தனித்தொகுதி, ஒரு பொதுத் தொகுதியை கேட்டு பெறுவது நலம் பயக்கும் என உயர்நிலைக் குழுவில் கருத்து தெரிவித்தார்கள். எங்கள் பணி, உழைப்பை முதல்வர் நன்கு அறிவார்.

விசிக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றதால் திமுகவுடன் தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக ஓரிரு நாட்களில் திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேச்சுவார்த்தைக்கு வர இயலாமைக்கு திமுக தொகுதி பங்கிட்டு குழுவிடம் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக அளிக்கும் தொகுதிகளில் எங்களுடைய சின்னத்தில் தான் போட்டியிடுவோம். அதிமுக, பாஜக கூட்டணிகள் அமைதியாக இருப்பதால் திமுக கூட்டணி மீது மட்டும் கவனம் செலுத்துகிறீர்கள்.

அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்காததால் திமுக கூட்டணியில் பரபரப்பு இருக்கிறது. திமுக கூட்டணியில் சின்ன சீராய்ப்பு கூட ஏற்படாது, எந்த கட்சியும் வெளியே போகாது. அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் தான் இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை, நாங்கள் விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் திரும்பத் திரும்ப கேட்போம்.

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக விசிகவில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விசிகவில் தேர்தல் நிதி குழு, தலைமையக ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, பரப்பரை குழு அமைக்கப்பட்டுள்ளது. கவுதம சென்னா தலைமையில் விசிக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்படும். பாவரசு தலைமையில் தேர்தல் நிதி குழு, வன்னி அரசு தலைமையில் தலைமையக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும், ஆளூர் ஷாநவாஸ் தலைமையில் தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.