மகாராஷ்டிராவை உலுக்கிய போலிச்சாமியார் அசோக் கராத் விவகாரத்தை அடுத்து, தற்போது மதுராவிலும் அதேபோன்றதொரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆன்மீக முகமூடி அணிந்து இளம்பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டி வந்த 29 வயதான அபிஷேக் மிஸ்ரா என்ற போலிச்சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். ‘ஐஐடி ரூர்க்கி’ (IIT Roorkee) போன்ற நாட்டின் உயர்கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர், பொதுமக்கள் தன்னை நம்ப வேண்டும் என்பதற்காக ‘அதீகர்தா நாராயண தாஸ்’ என்று பெயரை மாற்றி ஆன்மீகவாதி போல் வலம் வந்துள்ளார். சத்தீஸ்கரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில், மதுராவில் இருந்த இவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஆன்மீக வீடியோக்கள் மூலம் பெண்களை ஈர்க்கும் அபிஷேக் மிஸ்ரா, அவர்களை மூளைச்சலவை செய்து குடும்பத்தினரை விட்டு பிரிய வைத்துள்ளார். மதுராவில் உள்ள இவரது வீட்டில் 24 இளைஞர்களும், இளம்பெண்களும் இவருடனே தங்கியிருந்துள்ளனர். தன் வசப்படும் பெண்களை ‘கந்தர்வ திருமணம்’ செய்து கொள்வதாகக் கூறி, பிரசாதத்தில் போதைப்பொருள் கலந்த பாலைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்வதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும், அதனை ரகசியமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து பெண்களை மிரட்டியும் வந்துள்ளார். இவரது மொபைல் போனில் இருந்து ஏராளமான ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மகனின் இந்த சுயரூபம் தெரிந்து இவரது தாயாரே வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினரிடம் இருந்து இவர் பெரும் தொகையையும் பறித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.