விஷ்ணுநகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஸ்ரீராம் மாணிக் மிசால் (37) என்பவர், கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி நள்ளிரவில் தனது வீட்டின் மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, தற்போது ஒரு அதிர்ச்சி திருப்பம் கிடைத்துள்ளது. உயிரிழந்த காவலரின் அண்ணன் லட்சுமண் மிசால் கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக உயிரிழந்த ஸ்ரீராமின் மனைவி சிவகங்கா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடந்ததில் இருந்தே, மனைவி சிவகங்கா தொடர்ந்து ஸ்ரீராமை மனரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகவும், குடும்பத்தினரைப் பொய் வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டி வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மிக முக்கிய திருப்பமாக, சிவகங்காவிற்கு ஒரு சக காவல் அதிகாரியுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஸ்ரீராம் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததும் தெரியவந்துள்ளது. தற்கொலைக்கு முன்பாக நடந்த தொலைபேசி உரையாடல்கள் மற்றும் ஆடியோ பதிவுகளை ஆதாரமாக ஸ்ரீராமின் குடும்பத்தினர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன் அடிப்படையில், இந்த சட்டவிரோத உறவுக்குத் துணையாக இருந்ததாகக் கூறப்படும் சப்-இன்ஸ்பெக்டர் சங்கப்பா புஜ்பால் மற்றும் கிரண் புலே என்ற பெண் ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடத்த ஸ்ரீராமின் அண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து விஷ்ணுநகர் மூத்த காவல் ஆய்வாளர் ராம் சோப்தே தலைமையிலான போலீசார், ஆதாரங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
