250 கிலோ எடையை இழுத்த சீன ரோபோ – தொழிலாளர்களுக்கு சவால்:
சீன ஸ்டார்ட்அப் நிறுவனம் மேஜிக் லேப் உருவாக்கிய ‘மேஜிக் பாட்’ என்ற ரோபோ தற்போது உலக கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த ரோபோ சாதாரண ரோபோ இல்லை; 250 கிலோ வரை எடையை இழுக்கும் திறன் கொண்டது.
வெளியிடப்பட்ட வீடியோவில், ரோபோ முதலில் 80 கிலோ, பின்னர் 170 கிலோ, இறுதியாக 250 கிலோ எடையை எளிதாக இழுத்து தனது சக்தியை நிரூபித்தது. குறைந்த எடையில் வினாடிக்கு 0.7 மீட்டர் வேகத்தில் நகரும் இது, அதிக எடையுடன் வினாடிக்கு 0.3 மீட்டர் வேகத்தில் வேலை செய்தது.
தொழிற்சாலைகளும் வீட்டு வேலைகளும் செய்யும் ரோபோ:
‘மேஜிக் பாட்’ மூன்றாம் தலைமுறை AI ரோபோவாக உருவாக்கப்பட்டுள்ளது. இது தொழிற்சாலைகளில் பொருட்களை தூக்குதல், ஸ்கேன் செய்தல், கிடங்குகளில் பொருட்களை அடுக்குதல் போன்ற பல பணிகளைச் செய்ய முடியும். அதோடு துணிகளை மடித்தல், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், வீட்டு வேலைகளில் உதவுதல் போன்ற பணிகளையும் செய்யக்கூடியது.
உடையக்கூடிய பொருட்களை கவனமாக கையாளும் திறனும் இதில் உள்ளது. மனிதர்களைப் போலவே நகர முடியும் வகையில் 42 டிகிரி சுதந்திர இயக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவில் RGBD கேமரா, ஃபிஷ்ஐ கேமரா, அல்ட்ராசோனிக் சென்சார்கள் போன்ற உயர் தொழில்நுட்ப அம்சங்களும் உள்ளன.
5 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் சக்தி:
இந்த ரோபோ 5 மணி நேரம் சோர்வின்றி வேலை செய்யக்கூடிய பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது. மனிதர்களைப் போலவே நடந்து ஓடுவதோடு, AI உதவியுடன் புதிய பணிகளை கற்றுக்கொள்ளும் திறனும் உள்ளது. இதை உருவாக்கிய நிறுவனம், ‘Magicdata AI Engine’ மூலம் ரோபோ தனது திறமையை மேம்படுத்திக் கொண்டே போகும் என தெரிவித்துள்ளது.
2025 முதல் காலாண்டிலேயே இதன் சிறிய அளவிலான உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவின் சில தொழிற்சாலைகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த ரோபோ, எதிர்காலத்தில் தொழிலாளர்களின் பணியைப் பதிலாக செய்யும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
