தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், சென்னையில் நாளை (மே 19) காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் இல்லத்தில் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தவெக-வின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் பலர் களம் மாறியுள்ள நிலையில், இந்த கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்றுநோக்கலாக மாறியுள்ளது.

​சட்டப்பேரவையில் ஆளும் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில், அதிமுக எம்எல்ஏக்களில் 25 பேர் எடப்பாடி பழனிசாமியின் முடிவை எதிர்த்து தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அதேநேரம், ஈபிஎஸ் தலைமையில் வெறும் 22 எம்எல்ஏக்கள் மட்டுமே கட்சித் தலைமைக்கு ஆதரவாக எதிராக வாக்களித்திருந்தனர். இந்த பெரும் பிளவினால் அதிமுகவின் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், நாளை நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.