தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், குதிரை சவாரிக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சுற்றுலாத் தலங்களில் குதிரை சவாரிக்கு அதிக வரவேற்பு இருக்கும் நிலையில், முறையான பராமரிப்பு இன்றி குதிரைகள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, உடல் நலக்குறைவு உள்ள குதிரைகளை எக்காரணம் கொண்டும் சவாரிக்கு பயன்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குதிரைகளைப் பராமரிக்கும் இடங்களை எப்போதும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்றும், இந்த விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்றும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இந்த அதிரடி உத்தரவு சுற்றுலாப் பயணிகள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
