நரேந்திர மோடி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி திலக் வர்மாவின் அபார சதத்தின் உதவியுடன் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் ஆடிய மும்பை அணிக்கு ஆரம்பம் சற்று தடுமாற்றமாகவே அமைந்தது. குறிப்பாக அதிரடி வீரர் திலக் வர்மா 22 பந்துகளில் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் குவிக்க திணறினார். அப்போது களத்திற்கு வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, ‘டைம் அவுட்’ இடைவேளையின் போது திலக் வர்மாவிடம் மிகவும் தீவிரமாகப் பேசி சில அறிவுரைகளை வழங்கினார்.

அதன்பிறகு திலக் வர்மாவின் ஆட்டத்தில் அசுர வேகம் தெரிந்தது. அடுத்த 23 பந்துகளில் மட்டும் 82 ரன்களை விளாசித் தள்ளிய அவர், ஒட்டுமொத்தமாக 45 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவரது இந்த அதிரடி இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். மும்பை அணி 200 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்ட இதுவே முக்கிய காரணமாக அமைந்தது.

 

இன்னிங்ஸின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திலக் வர்மா சதம் கடந்தபோது, எல்லைக்கோட்டுக்கு அருகே நின்றிருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் எதிர்வினை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. திலக் சதம் அடித்த அந்த நொடியில், ஹர்திக் உற்சாக மிகுதியால் துள்ளிக்குதித்து, கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தன்னிடம் கடிவாங்கிய தம்பி போன்ற ஒரு வீரர், அடுத்த சில நிமிடங்களில் சாதித்துக் காட்டியதைக் கண்டு ஒரு அண்ணனாக ஹர்திக் கொண்டாடிய அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திலக் வர்மாவுக்கு அறிவுரை வழங்கிய அதே கேப்டன், அவரது வெற்றியைத் தானும் ஒரு சிறுவனைப் போலக் குதித்துக் கொண்டாடியது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திலக் வர்மாவின் இந்த ‘மெய்டன் செஞ்சுரி’ மற்றும் ஹர்திக் பாண்டியாவின் பெருந்தன்மையான கொண்டாட்டம் இந்த ஆட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.