நரேந்திர மோடி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில், கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் கடுமையான அறிவுரைக்குப் பிறகு அதிரடியாக விளையாடிய திலக் வர்மா, தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தார். இப்போட்டியில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது களமிறங்கிய திலக் வர்மா, தொடக்கத்தில் ரன் குவிக்க மிகவும் சிரமப்பட்டார். அவர் எதிர்கொண்ட முதல் 22 பந்துகளில் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

ஆட்டத்தின் இடைவேளையின் போது, மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மைதானத்திற்குள் வந்து திலக் வர்மாவிடம் மிகவும் ஆவேசமாகப் பேசினார். திலக் வர்மாவின் மந்தமான ஆட்டத்தைக் கண்டித்து ஹர்திக் கத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. கேப்டனின் கண்டிப்பிற்குப் பிறகு திலக் வர்மாவின் ஆட்டத்தில் பெரும் மாற்றம் தெரிந்தது. அதுவரை தடுமாறிய அவர், அடுத்த 23 பந்துகளில் மட்டும் 82 ரன்களை விளாசித் தள்ளி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மாவின் ஒரே ஓவரில் திலக் வர்மா 26 ரன்களைக் குவித்தார். பிரசித் கிருஷ்ணா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுக்கப்பட்டது. அந்த ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து, திலக் வர்மா தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பூர்த்தி செய்தார்.


மொத்தம் 45 பந்துகளை எதிர்கொண்ட திலக் வர்மா 101 ரன்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். ஒரு கட்டத்தில் ரன் குவிக்கத் திணறிய மும்பை அணி, திலக் வர்மாவின் இந்த அசுர வேக ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 199 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டியது. மேலும் கேப்டனின் ‘கடுமையான வார்த்தைகளே’ திலக் வர்மாவின் இந்த அபாரமான இன்னிங்ஸிற்கு உந்துதலாக அமைந்தது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.