தமிழகத்தில் ஹோட்டல்கள் மற்றும் துரித உணவகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மயோனைஸ் (Mayonnaise) மீதான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக, பச்சை முட்டையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ், விரைவில் கெட்டுப்போவதோடு அதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் எளிதாக உருவாகின்றன. இதனால் உணவில் நச்சுத்தன்மை (Food Poisoning) ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

​கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட இந்தத் தடை, தற்போது 2027 ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஷவர்மா, கிரில் சிக்கன் போன்ற உணவுகளுடன் மயோனைஸ் விரும்பி உண்ணப்படும் நிலையில், சுகாதாரக் காரணங்களுக்காக இந்தத் தடை தொடரும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. தடையை மீறி பச்சை முட்டை மயோனைஸை தயாரிப்பவர்கள் அல்லது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.